மெளனம்...

நடவுப் பாட்டு
எதுவும் கேட்கவில்லை.
ஆனால்
சுற்றி நிற்கிற மெளனம்
சொற்களற்ற மெளனமல்ல.
நிலமெங்கும்
பச்சை நாற்றுக்கள்...
வியர்வையில்
குளிர்ந்த களங்கமில்லா நீர்...
மாறாத நம் வாழ்க்கை போல
கருத்து மிளிரும் சேறு...
ஊன்றிய கற்களுக்குள்ளிருந்து எழும்பும்
சவமான நிலத்தின் பிணவாடை...
அசோகர் மரம் நட்ட கதையை
புரியாத மொழியில்
நெட்டுருப் போடும் சத்தம்...
சுற்றி வளைத்து விழுங்குகிறது
கண்ணுக்குத் தெரியாத
மலைப் பாம்பு.
இருண்டு கிடக்கும்
என் கண்களில்
பாலிடால் தெரிகிறது.
பாட மறந்த உன்னில்
உழைத்து வாழத் துடிக்கும்
பிடிவாதம் பேசுகிறது.
நடவுப் பாட்டு
எதுவும் கேட்கவில்லை.
அது தற்செயலானதல்ல.






2 comments:
தோழர் பால்ராஜ்,
அந்த வாழ்வின் வலியும்,துயரமும்
இந்த வார்த்தைகளுக்குள் பிடிபட
வில்லை என்று கருதுகிறேன்.
எனவே தான் படிமங்களும் அடர்
காட்சி சித்திரங்களாக விரியாமல் மிக
இலேசாக மிதக்கிறது பஞ்சைப் போல.
இருக்கலாம் தோழர் பாவெல். ஆனால், இக்கவிதையில் படிமம் மொழியிலிருந்து எழும்புவதற்கு பதிலாக கண்ணெதிரில் புகைப்படமாக இருக்கிறது. இக்கவிதை இப்புகைப்படத்தை மொழியாக்கும் முயற்சி மாத்திரமே. எனவே, கவிதை எழுதப்பட்ட பின்னால் இப்புகைப்படம் சேர்க்கப்படவில்லை. மாறாக புகைப்படத்திற்குள் ஒரு சிறு பயணமாகத்தான் எழுதப்பட்டது. ஆனால், இவ்வார்த்தைகள் அழுத்தமாக இல்லையென்றால் அது கவிதையின் குறைபாடுதான். விமர்சனத்திற்கு நன்றி. விமர்சனங்கள் வளர்ச்சிக்கு உதவும். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Post a Comment